சேலத்தில் வாக்களிக்கக் காத்திருந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சேலத்தில் வாக்களிக்கக் காத்திருந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Updated on
1 min read

சேலம்:சேலத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கக் காத்திருந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது

இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ்( 39). இவரது மனைவி அனிதா (39) சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அனிதாவின் தாய் வீடு ஏத்தாப்பூரில் உள்ளது. ஏத்தாப்பூரில் இருந்து தேர்தல் பணிக்காக ஆத்தூரை நோக்கி தம்பதியர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததில் நிலைத்திடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in