

விழுப்புரம்: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறும்” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டாக்டர் பொன். கௌதமசிகாமணி எம்.பி. ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.
அதன் பின்னர் வெளியே வந்த அமைச்சர் பொன்முடி, செய்தி யாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறும்” என்றார்.
அப்போது மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செ புஷ்பராஜ், நகரச் செயலர் சக்கரை, நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் பலர் உடனிருந்தனர்.
.