Published : 19 Apr 2024 05:30 AM
Last Updated : 19 Apr 2024 05:30 AM
சென்னை: சென்னையில் 2,400 வாக்குச்சாவடிகளை இணைய வழியில் `வெப்காஸ்டிங்' முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில், 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்துக்குள் வரும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 938 அமைவிடங்களில் அமைந்துள்ளன. 44 அமைவிடங்களில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்த வாக்குச்சாவடிகளில் 775 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 16 இடங்களில் நவீன மாதிரி வாக்குச்சாவடி, மகளிரால் மட்டுமே இயக்கப்படும் 1,461 மகளிர் வாக்குச்சாவடிகள் மற்றும் 4 இடங்களில் இளைஞர்களால் இயக்கப்படும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 18 ஆயிரத்து 737 போலீஸார், 19 ஆயிரத்து 412 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4 ஆயிரத்து 842 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
3-ம் கட்ட பயிற்சி: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 16 இடங்களில் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது.
நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளை (ஏப்.19) காலை 5.30 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வந்தால், அவர்களை காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து செல்ல வாகன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க அனைத்து வாக்குச்சாவடிகள் முன்பும் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மொத்த வாக்குச்சாவடிகளில் 65 சதவீதம் என சுமார் 2 ஆயிரத்து 400 வாக்குச்சாவடிகளை இணைய வழியில் ‘வெப்காஸ்டிங்’ முறையில் நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளும் அடங்கும். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது தென்சென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT