Published : 19 Apr 2024 05:50 AM
Last Updated : 19 Apr 2024 05:50 AM
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது, முதல்வர் ஸ்டாலினுக்கு சூட்டப்பட்ட மணிமகுடம் என்று திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022 மார்ச் 1-ம் தேதி தொடங்கி வைத்தார். ‘இது என் கனவு திட்டம்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழக மாணவர்கள், இளைஞர்கள் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி, அனைவரும் அனைத்திலும் முதலாவதாக வரக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் இத்திட்டம்.
அனைத்து இளைஞர்களையும் கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயல்,திறமையில் சிறந்தவர்களாக மாற்றவேண்டும் என்ற உணர்வுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் 28 லட்சம்இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதன் தொடக்க விழாவில் முதல்வர் குறிப்பிட்டபடி, பெருமையளிக்கும் விதமாக இத்திட்டம் ஒரு வெற்றிச் செய்தியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் 42 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் தேசிய அளவில் 78-வது இடத்திலும், தமிழக அளவில் 2-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளவர் பிரசாத்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் கடந்த 2022-ல் படிப்பை முடித்த இவர், “மத்திய அரசின் குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற, நான் முதல்வன் திட்டம் எனக்கு உதவியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்ததும், முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நான் முதல்வன் திட்டம் என் கனவு திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகளே அதற்கு சாட்சி’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ள காலை உணவு திட்டம், இந்தியாவில் தெலங்கானாவை தொடர்ந்து, உலக அளவில் கனடா நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்போது ‘நான் முதல்வன்’ திட்டம் மற்றொரு வெற்றி செய்தியை தந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றிமேல் வெற்றியாக வந்து புகழ் மகுடம் சூட்டியுள்ளது. இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT