Published : 19 Apr 2024 06:06 AM
Last Updated : 19 Apr 2024 06:06 AM
சென்னை: சென்னையில் நேற்று நுங்கம்பாக்கம், குமரன் நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த முபாரக் உசைன் என்பவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனியார் மென்பொருள் ஊழியர் தர்ஷன் குமார் என்பவரது வீட்டில் சோதனை நடந்தது.
இதேபோல், குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஆடிட்டர் ஒருவரது வீடு, தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவரது வீடு, மண்ணடியில் ஒருவரது வீடு என சென்னையில்5 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக வந்த புகாரின்அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எதற்காக சோதனை நடந்தது என்பது குறித்த விவரங்களை வெளியிட முடியும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறஉள்ள நிலையில், நேற்று 20-க்கும்மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னையில் நடத்தியசோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT