

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் 2019-2024 ஆண்டு காலகட்டத்தில் தமிழக எம்.பி.க்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியில் 75 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை.
மத்திய சென்னை, வேலூர் மக்களவை தொகுதி எம்.பி.களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் எந்த தொகையும் பயன்படுத்தப்படவில்லை என பேசி இருந்தார். அதன் அடிப்படையில், அவதூறுவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏற்றுக்கொள்ளத்தகாத விமர்சனங்களை திமுகவினர் வைத்தபோது, அதை எதிர்கொண்டு விளக்கம் அளித்தோம். மத்திய சென்னை தொகுதி தேர்தல் முடிவு துக்ககரமாக வரும் என்பது தயாநிதி மாறனுக்குத் தெரிந்துவிட்டதுபோல் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.