

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் முற்றிலும் பெண் அலுவலர்களே பணிபுரியும் ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன..
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரியகுளம் தென்கரை அக்ரஹாரம் டிரைம்ப் நடுநிலைப் பள்ளி, போடி இசட்.கே.எம்.மேல்நிலைப் பள்ளி, கம்பம் உத்தமபுரம் இலாஹி பள்ளி என 4 இடங்களில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாழை மரம் கட்டப்பட்டு, அலங்கார காகிதங்கள் கட்டி வீடுகள் போல அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர்கள் அமர நாற்காலிகள், ஃபேன், வழிகாட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட வசதி கள் செய்து தரப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது வாக்காளர்களுக்கு கற்கண்டு, சந்தனம், குங்குமம் வழங்கப்படும். மேலும் அவர்களின் பாகம் எண், வரிசை எண் உள்ளிட்டவற்றை அறிந்து எந்த அறையில் வாக்களிக்க வேண்டும் என்று வழிகாட்டவும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘பிங்க்’ வாக்குச்சாவடிகள்: இதே போல் முற்றிலும் பெண் அலுவலர்களே பணிபுரியும் ‘பிங்க்’ வாக்குச் சாவடிகள் சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளி, வட கரை அரசு மேல்நிலைப் பள்ளி, மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பழனி செட்டிபட்டி பழனியப்பா பள்ளி, உத்தம பாளையம் அல்ஹிமா பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு ள்ளன. லட்சுமிபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முழுவதும் மாற்றுத்திறன் அலுவலர் கள் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.