Published : 11 Apr 2018 08:01 AM
Last Updated : 11 Apr 2018 08:01 AM

இது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டமல்ல; தமிழ் மண்ணுக்கான போராட்டம்: சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் கவிஞர் வைரமுத்து ஆவேசம்

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் அல்ல, தமிழ் மண்ணுக்கான போராட்டம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த போராட்டம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிரானதல்ல. போலீஸாருக்கு எதிரான போராட்டமும் அல்ல. காவிரி நதி உரிமைக்கான போராட்டம். தமிழ் மண்ணுக்கான போராட்டம். நாங்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்துள்ளோம். தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது.

தமிழர்களின் ஆதி பண்பாடு விவசாயம். அந்த விவசாயம் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நீண்டகால அவகாசம் தேவையில்லை. எங்கள் தஞ்சை மண்ணை பாலைவனமாக்க,. காவிரிப்படுகையை எண்ணெய் படுகையாக்க யாராவது சூழ்ச்சி செய்தால் அதை விட மாட்டோம். நாங்கள் கடைசி வரை போராடுவோம். தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். இவ்வாறு வைரமுத்து கூறினார்.

அரசியல் சார்ந்த கூட்டமல்ல

தமிழர் பண்பாட்டு கலை இலக்கிய பேரவை சார்பில் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா நிருபர்களிடம் கூறும்போது, “கட்சி அடையாளம், கொடி அடையாளம் இல்லாமல் தமிழர்கள் என்ற ஒரே அடையாளத்துடன் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டுள்ளோம்.

போராட்டத்துக்கு போலீஸாரிடம் அனுமதி பெற்று கண்ணியமான முறையில் எங்கள் எதிர்ப்பை காட்டுகிறோம். இது அரசியல் சார்ந்த கூட்டம் அல்ல. தமிழர் என்ற அடையாளம் உள்ளவர்கள் கலந்துகொள்ளும் போராட்டம். நீதி கிடைக்காமல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்” என்றார்.

இயக்குநர் கவுதமன் கூறும்போது, “இது எங்கள் மண். காவிரி எங்கள் உரிமை. எங்களை அழிக்க யாரையும் விடமாட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x