Published : 18 Apr 2024 05:47 AM
Last Updated : 18 Apr 2024 05:47 AM

திருச்சி ஒருங்கிணைந்த மையத்தில் அஞ்சல் வாக்குகளை பிரிக்கும் பணி தொடக்கம்

திருச்சி ஒருங்கிணைந்த மையத்தில் நேற்று அஞ்சல் வாக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்திலிருந்து அஞ்சல் வாக்குகளை தொகுதிவாரியாகப் பிரித்து அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவாகும் அஞ்சல் வாக்குகளை, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கொண்டு சேர்ப்பதில் ஏற்கெனவே இருந்த நடைமுறையால் காலதாமதம் ஏற்பட்டது. மேலும்,இந்தப் பணியில் அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, இந்த நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில், அஞ்சல் வாக்குகளை ஒருங்கிணைத்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, அஞ்சல் வாக்குகளை தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்புவதற்கான ஒருங்கிணைந்த மையம், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, 39 தொகுதிகளிலும் பதிவான அஞ்சல் வாக்குகள் இந்த மையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலரிடம் ஒப்படைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்தப் பணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தொடங்கிவைத்தார்.

93,642 அஞ்சல் வாக்குகள்: தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 93,642 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தென்சென்னையில் 5,445 வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அதேபோல, இடைத்தேர்தலை சந்திக்கும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 239 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளன. இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x