

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர்பிரியா, துணை மேயர் மகேஷ்குமார்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அரசு சார்பில், தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கிண்டியில் மரியாதை செலுத்தினர்.
இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சேலத்தில் உள்ள தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பதிவில், சமூக ஒற்றுமையின் சின்னம். ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின்ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த சின்னமலையின் பிறந்தநாளில், இந்தியாவைக் காக்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், ‘‘மாவீரன் தீரன் சின்னமலையின் புகழ், வீர வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்’’ என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனதுபதிவில், ‘‘தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை அடுத்ததலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘‘கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டுவதை அடியோடுஎதிர்த்த மன்னர்களில் தீரன் சின்னமலையும் ஒருவர். அவரின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.