“குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை; உழைக்க வந்திருக்கிறோம்”  - விஜயபிரபாகரன் பேச்சு @ விருதுநகர்

 “குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை; உழைக்க வந்திருக்கிறோம்”  - விஜயபிரபாகரன் பேச்சு @ விருதுநகர்
Updated on
1 min read

விருதுநகர்: “குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை. மக்களுக்கு உழைக்க வந்திருக்கிறோம்” என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உருக்கமாக பேசினார்.

விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வாசல் வரை பேரணியாக வந்து கோயில் முன்பு இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக பேரணியின் போது கொட்டுமுரசு அடித்துக்கொண்டே வாக்கு சேகரித்தார். தொடர்ந்து விஜயபிரபாகரனுக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. அப்போது, அவர் பேசியது: “21 நாள் பிரச்சாரம் செய்திருக்கிறேன். இன்று தான் நானும், எனது தாயும் ஒரே வாகனத்தில் ஏறி பிரச்சாரம் செய்தோம். ஏற்கெனவே அண்ணன் ராஜன் செல்லப்பா சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டுமின்றி எனது சொந்த செலவிலும் மக்களுக்கு செலவு செய்ய தயாராக இருக்கிறேன். என்னுடைய தந்தையின் வார்த்தையை எப்படி மதிப்பேனோ, அதுபோல் எனக்கு வாக்களிக்கும் மக்களின் வார்த்தைகளையும் மதிப்பேன். நாங்கள் குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை. மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம்” என உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “விஜயபிரபாகரன் எனது பிள்ளை இல்லை. இனிமேல் உங்கள் பிள்ளை. உங்கள் கையில் ஒப்படைத்து விட்டேன். மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுப்போம். விஜயபிரபாகருக்கு வாய்ப்பு கொடுப்போம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள்.

பராசக்தி எப்படி முருகன் கையில் வெற்றிவேலை கொடுத்து போரில் வென்று வா என, சொன்னார்களோ, அதுபோல விஜயபிரபாகருக்கு தாயாக, சக்தியாக இந்த வெற்றி வேலை கொடுக்கிறேன். இப்போரில் மகத்தான வெற்றியை தர வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in