Published : 17 Apr 2024 05:13 PM
Last Updated : 17 Apr 2024 05:13 PM

வடக்கு மண்டல நிலவரம்: 8 தொகுதிகளில் எழுச்சி யாருக்கு? - ஒரு பார்வை

தமிழகத்தின் மொத்த 40 மக்களவைத் தொகுதிகளில் வடக்கு மண்டலத்தில் எந்தக் கட்சி முந்துகிறது? வடக்கு மண்டலத்தின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

காஞ்சிபுரம் (தனி): காஞ்சிபுரம் தனித் தொகுதியில் திமுக சார்பாக செல்வம், அதிமுக சார்பாக ராஜசேகர், பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பாக ஜோதி வெங்கடேசன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வி.சந்தோஷ்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர். கடந்த முறை திமுக சார்பாகப் போட்டியிட்ட செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த முறை 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 50 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தன் வெற்றியைப் பதிவு செய்தார்.இம்முறையும் இவரே ரேஸில் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவுக்கு இருக்கும் பலமான கட்டமைப்புகள் இவருக்கு உதவும் என சொல்லப்படுகிறது. அதே வேளையில், பாஜக சார்பாகப் போட்டியிடும் ஜோதி வெங்கடேசனும் பாமகவின் வாக்குவங்கியைக் கொண்டு போட்டியைக் கடுமையாக்குவார் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அரக்கோணம் : அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீண்டும் இங்கு களமிறங்குகிறார். அதிமுக சார்பாக ஏ.எல்.விஜயன், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக வழக்கறிஞர் பாலு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகப் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதியில் சிட்டிங் எம்.பி., ஜெகத்ரட்சகன் மீது அதிருப்தி நிலவுகிறது. இருப்பினும் இந்தத் தொகுதியில் திமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல பாஜக சார்பாகப் போட்டியிடும் பாமகவுக்கும் இங்கு வாக்கு வங்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் பாமக வேட்பாளர் இரண்டாவது இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த இருவருக்கும் நல்ல போட்டி இருக்கும். அதிமுக தனக்கு இருக்கக் கூடிய பிரதான வாக்கு வங்கியை நம்பி களத்தில் நிற்கிறது.

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக கதிர் ஆனந்த், அதிமுகவில் டாக்டர் பசுபதி, பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிரதான போட்டியாளராகக் களத்தில் உள்ளனர். இதில் கடந்தமுறை கதிர் ஆனந்த் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பெண்கள் குறித்து அவரது பொறுப்பற்ற பேச்சு என்று அவர்மீதான அதிருப்திகள் முன்வைக்கப்படுகிறன. இதனைப் பிரதானப்படுத்தி பிற கட்சி வேட்பாளர்கள் களத்தில் இயங்கி வருகின்றனர். எனினும், வேலூர் திமுகவின் கோட்டை என்றுதான் கருதப்படுகிறது. முக்கியமான திராவிடத் தலைவர்களை உருவாக்கி வேலூரில் திமுக வாக்கு வங்கி அவர்களுக்கு கைகொடுக்கும் என சொல்லப்படுகிறது.

ஆகவே, கதிர் ஆனந்த் தான் இங்கு ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். குறிப்பாக, கட்சிக்குள் அதிருப்தி இருக்கும் நிலையிலும் தலைமைக்கு கட்டுப்பட்டு திமுக நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். தவிர, கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஏசி சண்முகம், பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். எனவே ’திமுக- பாஜக’ இடையேதான் கடுமையான போட்டியிருக்கும் என சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாகக் கடந்த முறை போட்டியிட்ட அண்ணாதுரை மீண்டும் களம் காணுகிறார், அதிமுக சார்பாக கலியபெருமாள், பாஜக சார்பாக அஸ்வத்தாமன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக DR ரா.ரமேஷ்பாபு ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். கடந்தமுறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணாதுரை 6 லட்சத்து 66 ஆயிரத்து 272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை அதிமுக பிடித்தது. இந்த நிலையில், தற்போது திமுக முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக கே.கோபிநாத் இங்கு போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக வி.ஜெயப்பிரகாஷ், பாஜக சார்பாக நரசிம்மன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யா வீரப்பன் களத்தில் உள்ளனர். இந்தத் தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட செல்லகுமார் 6,11,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் மீதான அதிருப்தி காரணமாக வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார்.

எனினும், காங்கிரஸ் தான் முன்னிலை வகிக்கிறது. ஆனால், கடந்தமுறை பெற்ற வாக்கு சதவீதம் குறைய அதிக வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. காரணம், இங்கு காங்கிரஸ் கட்சிக்கு என்று எந்த வாக்கு வங்கியும் கிடையாது. திமுகவை மட்டுமே நம்பி இருக்கிறது. தவிர, அதிமுக களத்தில் கடினமாக உழைத்து வருவதால் காங்கிரஸ் - அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதேபோல், வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவது நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆரணி: ஆரணி தொகுதியில் திமுக சார்பாக தரணி வேந்தன், அதிமுக சார்பாக ஜி.வி.கஜேந்திரன், பாஜக கூட்டணி சார்பாக பாமகவின் முனைவர் அ.கணேஷ் குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக DR கு.பாக்கியலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரஸுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. கடந்தமுறை காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை திமுக களமிறங்கியுள்ளது. இங்கு அதிமுக மற்றும் பாமக என இரு கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருப்பதால் மும்முனை போட்டியே நிலவுகிறது. எனினும் இங்கு திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

விழுப்புரம் (தனி): திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கடந்தமுறை போட்டியிட்ட ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக ஜெ.பாக்யராஜ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக முரளி சங்கர் மற்றும் நாதக சார்பாக மு.களஞ்சியம் ஆகியோர் களத்தில் உள்ளனர். தொடர்ந்து கூட்டணிக்கு தொகுதியைக் கொடுப்பதன் காரணமாக திமுக நிர்வாகிகள் பெரிதும் அதிருப்தியில் இருப்பதால், தொகுதியில் வேலை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், களத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் சிறப்பாக வேலை செய்யும் அதிமுக போட்டியில் கடுமை காட்டுகிறது. அதுதவிர, பாமகவுக்கு உள்ள வாக்கு வங்கி அவர்களுக்கு சாதகமாக அமையும். எனவே, விசிக - அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது .

கள்ளக்குறிச்சி: கடந்த முறை திமுக சார்பாக வெற்றி பெற்ற கவுதம சிகாமணி மாற்றப்பட்டு, மலையரசன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக குமரகுரு, பாஜக கூட்டணியில் உள்ள பாமகவின் வேட்பாளராக இரா. தேவதாஸ் உடையார் மற்றும் நாதக வேட்பாளராக ஆ. ஜெகதீசன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கும் திமுக சிட்டிங் எம்பி மீது அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.எனினும் ரேஸில் திமுக முன்னிலையில் இருப்பதாகவே தகவல் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x