

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசன், அதிமுக கட்சி சார்பாக டாக்டர். சரவணன், பாஜக கட்சி சார்பாகப் பேராசிரியர் ராம சீனிவாசன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக முனைவர் மோ.சத்யாதேவி ஆகியோர் களத்தில் முக்கியமான வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.
கடந்த முறை சு.வெங்கடேசன் வென்றது எப்படி? - தமிழகத்தில் சென்னைக்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமான மதுரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ’மதுரை திமுக கோட்டை’ என்றுதான் அறியப்பட்டது. இந்த நிலையில், கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியான சிபிஎம்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இடதுசாரி இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களான கே.டி.தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரய்யா எனப் பல ஜாம்பவான்கள் எம்.பி.யான தொகுதி இது. அதனால் இடதுசாரி கட்சிகளுக்கு இங்கு நல்ல வாக்கு வங்கி இருக்கும். இப்படியாக சிபிஎம் + திமுக வாக்கு வங்கி மதுரையில் சு.வெங்கடேசன் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, பாஜக எதிர்ப்பு அலையும் தொகுதியில் திமுக கூட்டணிக்குச் சாதகமான வாக்குகளைப் பெற்று தந்தது.
2024-ம் ஆண்டு தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - சிட்டிங் எம்பியான சு.வெங்கடேசனின் செயல்பாடுகளில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, பாஜக அரசின் செயல்பாடுகளை மேடைதோறும் விமர்சித்தார். ஆனால், மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்துதான் எதிர்த்தரப்பினர் பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில், பரப்புரையில் மேடையில் பேசிய அதிமுக வேட்பாளர் சரவணன், “சு.வெங்கடேசன் மதுரைக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை” என்னும் விமர்சனத்தை முன்வைத்தும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த அதிருப்தி வாக்குகள் மாற்றுக் கட்சிக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அதிமுக வேட்பாளர் சரவணன் திமுகவில் இருந்தபோது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆனார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குச் சீட் கிடைக்காமல் போனதால் பாஜகவில் இணைந்தார். பிறகு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். எனவே, அவருடைய செல்வாக்கு மற்றும் அதிமுக வாக்கு வங்கி இவருக்கு உதவும் என சொல்லப்படுகிறது. அதேபோல், பாஜகவுக்கும் இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருக்கிறது. எனவே, மதுரை தேர்தல் களம் அனல் பறக்கிறது.
அதிமுக நிலை என்ன? - அதிமுக வேட்பாளராக மதுரையில் களமிறக்கப்பட்டிருக்கிறார் டாக்டர். சரவணன். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். இவற்றோடு அதிமுகவுக்கு மதுரையில் உள்ள பாரம்பரிய வாக்கு வங்கி அவருக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. தவிர, அதிமுக பொறுத்தவரையிலும் சு.வெங்கடேசனின் முந்தைய செயல்பாடுகளை விமர்சித்து பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.
பாஜக நிலை என்ன? - பாஜக சார்பாகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் ராம சீனிவாசன். அவர் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அமல்படுத்திய திட்டங்களால் மக்கள் அடைந்த பலன் என்ன? மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அமல்படுத்தப்போகும் திட்டங்கள் என்ன என்பனவற்றைக் கூறி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக, அமித் ஷா, டிடிவி. தினகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். சிட்டிங் எம்பி மீதான அதிருப்தி மற்றும் பாஜக வாக்கு வங்கியை நம்பி அவர்கள் களத்தில் நிற்கிறார்.
மக்கள் கோரிக்கை என்ன? - இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராதது, புதிய தொழிற்சாலைகள் கட்டமைக்கப்படாதது, மதுரை விமான நிலையம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படாதது, மெட்ரோ பணிகள், எய்ம்ஸ் மருத்துவமனை என முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கிடப்பில் இருப்பது என மதுரையில் தீர்க்கப்படாத முக்கிய பிரச்சினைகள் இருக்கிறது.
திமுக கூட்டணி நிலை என்ன? - சு.வெங்கடேசன் பொறுத்தவரைத் தொகுதிக்குச் சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிதாக திட்டங்களை அமல்படுத்தவில்லை. இருந்த போதிலும் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 4.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். இம்முறை களம் சற்று கடினமாக இருப்பதால் இந்த வாக்குகள் பெறுவாரா என்பது சந்தேகம்தான். எப்படியும் வெற்றிக்கனியை எட்ட வேண்டும் என்ற இலக்கில் திமுகவினர் களத்தில் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் ஸ்டாலினும் மதுரையில் சு.வெங்கடேசனை ஆதரித்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தவிர, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அவரது கட்சியினர் மட்டுமில்லாது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் தொகுதி முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் பலமும், தீவிர பிரச்சாரமும் அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளன.
மதுரை மக்களவைத் தொகுதி களம் பொறுத்தவரையிலும், திமுக - அதிமுக - பாஜகவிடையே மும்முனை போட்டிதான் நடக்கிறது. ஆனால், திமுக கூட்டணியில் போட்டியிடும் சு.வெங்கடேசன் சற்றே முன்னிலையில் இருக்கிறார். திமுக மற்றும் சிபிஎம் கட்சியின் வாக்கு வங்கி அவருக்குப் பெரியளவில் கைகொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது. இருப்பினும், அதிமுக வேட்பாளர் சரவணன் இவருக்கு ’டஃப் ஃபைட்’ கொடுப்பார். மக்கள் தீர்ப்பு என்னவென்பதை தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.