Published : 17 Apr 2024 01:05 PM
Last Updated : 17 Apr 2024 01:05 PM

தேர்தல் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் பின்னணியில் தொழிலாளர்களின் உழைப்பு!

படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: தமிழகத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு பந்தல் அமைக்க பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இரவு பகலாக தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாகவே கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு மக்களவை தொகுதி வாக்காளர்களை ஒரே இடத்தில் கூடவைத்து பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை பெரிய கட்சிகள் அனைத்தும் நடத்தியிருந்தன.

இதற்காக பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில் அமரும் வகையில் பிரச்சார பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல், ஒலி, ஒளி ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டி பகுதிகளில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டங்களுக்காக அத்தகைய பிரமாண்ட பந்தல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதுபோல் நாங்குநேரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாளையங்கோட்டையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பெரிய அளவிலான பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கும் மேடை உள்ளிட்ட பிர மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது போல் தமிழகத்திலுள்ள பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு பந்தல், மேடை, ஒளி, ஒலி, இருக்கை வசதிகள், கொடி தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் அமைக்கும் பணிகளை ஒட்டுமொத்தமாக சிலர் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தக்காரர்களிடம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்ட பந்தல் அமைப்பு பணிகளில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆர். ராஜ்குமார், மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த எஸ்.பி. அப்புக்குட்டி, நவீன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறியதாவது: ஆண்டில் 365 நாட்களுக்கும் நாங்கள் இது போன்ற பணிகளில் ஈடுபடுகிறோம். இது தேர்தல் காலம் என்பதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இரவு பகலாக பல்வேறு இடங்களுக்கும் சென்று பந்தல் அமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். இதனால் எங்கள் சொந்த ஊர்களுக்கு கூட செல்ல முடியவில்லை. பிரதமர், அண்ணாமலை, உதயநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கான பிரச்சார கூட்டங்களுக்கு பந்தல் அமைக்கும் பணிகளில் இந்த தேர்தலில் ஈடுபட்டோம்.

பணிகள் கிடைக்கும் நாட்களில் நாளொன்றுக்கு ரூ.1,000 கிடைக்கும். அத்துடன் சாப்பாடு வழங்குவார்கள். பந்தல் அமைக்கும் இடங்களிலேயே இரவில் தங்க நேரிடும். தமிழகம் முழுக்க எங்களைப்போல் தேர்தல் பிரச்சார ஏற்பாடு பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கான பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு பின்னணியில் பல நூறு தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது. அவர்களது பணியில் தேர்தல் பிரச்சார களமும் களைகட்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x