இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: “நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று (ஏப்.16) வெளியிட்டது. 1016 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 3 இடங்களையும் மாணவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில் மாணவர் ஆதித்யா ஸ்ரீவத்சவா முதலிடத்தையும், மாணவர் அனிமேஷ் பிரதான் 2-ம் இடத்தையும், மாணவர் டோனூரு அனன்யா 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் 41-வது இடத்தை பிடித்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ்ராம், இவர், தமிழக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் 78-வது இடத்தை பிடித்துள்ள தமிழக டாக்டர் எஸ்.பிரசாந்த் தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். இவர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக மாணவர்கள் 42 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தேசத்துக்காகப் பணியாற்ற அடியெடுத்து வைக்கும் அவர்களின் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர்கள் செல்லும் இடமெல்லாம் நல்மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார்களாக” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி, இன்று (புதன்கிழமை) முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்” எனப் பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in