

தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து அரூரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக 2 கட்சிகளும் சுயநலக் கூட்டணிகளை அமைத்துள்ளன. அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இக்கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் வெற்றிபெறமுடியாது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு உள்ளது. அன்று அவர் மீது குற்றம்சாட்டிய, இன்றைய முதல்வர் ஆட்சியில் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது, ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என்று இன்றைய முதல்வர் சொன்னார். ஆனால் 3 வருடம் ஆகியும் நடவடிக்கை இல்லை என்றார்.