

தேனி: 1977-ம் ஆண்டு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது இருந்தே தமிழக அளவிலான கவனத்தை தேனி ஈர்க்கத் தொடங்கியது. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா, நடிகை வெண்ணிறஆடை நிர்மலா போன்றோர் போட்டியிட்டதால் தேனி விஐபி தொகுதியாகவே மாறியது.
கடந்த மக்களவை தேர்தலில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திர நாத் ஆகியோர் போட்டியிட்டதால் மீண்டும் மாநில அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அத்தேர்தலில் மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, தேனியில் மட்டும் தோல்வி அடைந்தது. அதிமுகவின் ஒரே ஒரு எம்பி என்ற நிலையையும் ‘தேனி’ ஏற்படுத்தியது. இது போன்ற செயல்பாடுகளில் தேனி தொடர்ந்து கவனிக்கத்தக்க தொகுதியாகவே இருந்து வருகிறது. இது இத்தேர்தலிலும் தொடர்கிறது.
காரணம் அமமுக சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன்தான். இவரை எதிர்த்து, திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் மதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முதல் மூன்று பிரதான வேட்பா ளர்களும் முன்பு அதிமுகவில் இருந்தவர்கள்தான். இரட்டை இலைக்காக கால நேரம் பார்க்காமல் கிராமம் தோறும் பிரச்சாரம் செய்தவர்கள். ஆனால் காலச் சூழலால் இன்றைக்கு வெவ்வேறு களத்தில் நிற்கின்றனர்.
குறிப்பாக, 2019-ம் ஆண்டு தேர்தலில் அமமுக சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன், தற்போது தனது ‘குருவான’ டி.டி.வி.தினகரனை எதிர்த்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்சார களத்தைப் பொறுத் தளவில் தங்கதமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் பின்னணி மிகப்பெரிய பலமாக உள்ளது. தற்போதைய ஆட்சியில் செய்த திட்டங்கள், நிறைவேற்றிய வாக்குறுதிகள் போன்றவை வாக்குகளாக மாறும் சூழ்நிலை உள்ளது.
அதே வேளையில் ஆங்காங்கே உள்ள உட்கட்சிப் பூசல், அவரது தோரணையான பேச்சு ஆகியவை தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டாலின், உதயநிதி போன்றோரின் பிரச்சாரமும் இவருக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளர் நாராயண சாமியைப் பொறுத்தளவில் இரட்டை இலை சின்னம் வலுவான ஆதரவாக உள்ளது. கிராமங்கள் நிறைந்த இத்தொகுதியில் இச்சின்னத்துக்கு குறிப்பிட்ட வாக்காளர்கள் இன்னமும் உள்ளனர்.
பொதுமக்களுக்கு அவர் புதிய முகம் என்றாலும், சாதாரண தொண்டனையும் உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லும் ஜெயலலிதா போன்ற நடவடிக்கை என்ற பிரச்சாரம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்துள்ளனர். டி.டி.வி.தினகரனைப் பொறுத்தளவில் ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று திட்டங்களை செயல்படுத்தி, ஒரு எம்பி.யாக நிரூபித்து காட்டியது மிகப் பெரிய பலம்.
இதனால் தான் செய்த வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்டு பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார். இருப்பினும் அணிமாறி களம் இறங்கி உள்ளது எந்தளவு கைகொடுக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அரசு ஊழியர்களின் வாக்குகளை சாதகமாக்க முயற்சி, இந்துக்களின் ஆதரவை பெறும் நடவடிக்கை என்று இவரின் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட கட்சிகளையே நம்பி வாக்களித்து வந்த பொது மக்களுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளது.
சீமானின் பேச்சால் கவரப்பட்ட இளைய வாக்காளர்களின் கவனம் வேட்பாளர் மதனின் பக்கம் ஓரளவு திரும்பி உள்ளது. நான்கு முனை போட்டி என்றாலும் கடுமையான பிரச்சாரம் மூலம் வாக்காளர்களின் கவனத்தை ஒவ்வொருவரும் வெகுவாக ஈர்த்து வருகின்றனர். இதனால் கணிப்புகளும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டுக் கொண்டே வருகின்றன.