“குக்கர் சின்னமே தேயும் அளவுக்கு வாக்களிப்பீர்” - தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்

“குக்கர் சின்னமே தேயும் அளவுக்கு வாக்களிப்பீர்” - தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்
Updated on
1 min read

பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா நேற்று பிரச்சாரம் செய்தார். சின்னமனூர் அருகே மேல்மணலாறு, மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட மலைகிராமப் பகுதிகளில் அவர் பேசியதாவது: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தபோதும், உங்களின் பாசம் மாறவில்லை. என் கணவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது.

ஆர்.கே.நகரில் பெரிய கட்சிகளை எதிர்த்து என் கணவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னம்தான் குக்கர். அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குக்கர் சின்னத்துக்கான பட்டனை வாக்காளர்கள் அழுத்தி அழுத்தியே தேயும் நிலை ஏற்பட்டது. அதே போல் தேனியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் போதெல்லாம் அமமுக சின்னம் ஞாபகத்துக்கு வர வேண்டும். அவர் ஏற்கெனவே இங்கு எம்.பி.யாக இருந்து, பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். கோயில் மண்டபம், சமுதாயக்கூடம் என்று பல கல்வெட்டுகளிலும் அவரது பெயர் உள்ளது.

தற்போது வெற்றி பெற்றால் தேனி தொகுதிக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வருவார். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இத்தொகுதியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஆண்டிபட்டி, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை, கோணம்பட்டி, எரணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in