குறிப்பிட்ட சமூகத்துக்கு துப்புரவு பணியை ஒதுக்கும்படி உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு
மதுரை: மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் 1,000 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் நிரந்தரமாகப் பணியில் அமர்த்தப்படவில்லை.
மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுக்கழிப்பிடங்கள் தூய்மைப்படுத்தும் பணி பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தனியார் ஒப்பந்தத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளால் ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் பெறுகின்றனர். அதேநேரத்தில், துப்புரவுப் பணியாளர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
எனவே, தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள தூய்மைப் பணி ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், தூய்மைப் பணியில் ஈடுபடும் குறிப்பிட்டசமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளடங்கிய சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, தூய்மைப் பணி ஒப்பந்தங்கள் மற்றும் கழிப்பறை பராமரிப்பு ஒப்பந்தங்களை அந்தக் குழுக்களுக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு விசாரித்து, தூய்மைப் பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில், கோரிக்கையில் திருத்தம் மேற்கொண்டு, புதியமனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
