

உடுமலை / பொள்ளாச்சி: இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரத்திலும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து உடுமலையிலும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது வராத பிரதமர், தேர்தலுக்கு மட்டும் தமிழகம் வந்து செல்கிறார். ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு மட்டும் தமிழக முதல்வர் ரூ.2,500 கோடி மதிப்பில் நிவாரண உதவிகளை அளித்தார். மத்திய அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை. மாநிலத்தின் உரிமைகளை அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து பாஜக அரசு இதுவரை கணக்கு காட்டவில்லை.
ஜிஎஸ்டி நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு 29 பைசா, உ.பி.க்கு ரூ.3, பிஹாருக்கு ரூ.7 என பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை பாஜக அரசு வஞ்சிக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றால், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்கே வழங்கப்படும். அமராவதி ஆலை நவீனப்படுத்தப்படும். ஆனைமலை, நல்லாறு அணை திட்டம் நிறைவேற்றப்படும். ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும்.
தாராபுரம் அருகே கொளத்துப் பாளையத்தில் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான 54 ஏக்கர் காலியிடத்தில் சிப் காட் தொழிற்சாலை அமைக்கப் படும். உப்பாறு அணைக்கு காவிரி அல்லது அமராவதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கேரள வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்ய ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், காஸ் சிலிண்டர் விலை ரூ. 500-ஆக குறைக்கப்படும். தமிழகத்தில் 31ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு 3 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களை மதிக்கக் கூடிய ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள், என்றார்.