Published : 17 Apr 2024 05:30 AM
Last Updated : 17 Apr 2024 05:30 AM

2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: முகவர்கள், பொதுமக்கள் தவிப்பு

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் நேற்று இரண்டாவது நாளாக பாதிப்படைந்தது. இதனால், முகவர்கள், பொதுமக்கள் தவித்தனர்.

சென்னையில் ஆவின் நிறுவனம் வாயிலாக, தினசரி 14.20 லட்சம்லிட்டர் பால் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் அம்பத்தூர், மாதவரம் ஆகிய பால் பண்ணைகளில் இருந்துதினசரி 8.50 லட்சம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், இந்த பண்ணைகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய கொள்முதல்பால் வரத்து குறைந்து, பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தினசரி அதிகாலை 2.30 மணிக்கு பண்ணைகளில் இருந்து ஆவின்பால் பாக்கெட்களுடன் செல்ல வேண்டிய வாகனங்கள் காலதாமதமாக புறப்பட்டன. இதனால்,மத்திய சென்னை, வடசென்னையில் பல இடங்களில் பால் விநியோகம் நேற்றுமுன்தினம் தாமதாகின. பால் முகவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பால் கிடைக்காமல்அவதிப்பட்டனர். இந்தபிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆவின் பால் விநியோகம் 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. மாதவரம் ஆவின்பால் பண்ணையில் இருந்து முகவர்களுக்கு அனுப்ப வேண்டிய ஆவின்பால் விநியோகம் தாமதமாகின.பால் வாகனங்கள் நேற்று அதிகாலை முதல் பால் பாக்கெட்கள் ஏற்றுவதற்காக மாதவரம் ஆவின் பால் பண்ணை வளாகத்திலேயே காத்திருந்தன.

கொளத்தூர், வியாசர்பாடி... இதனால், மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, திரு.வி.க. நகர், பாரிமுனை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், முகப்பேர், நுங்கம்பாக்கம், வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட வேண்டிய சுமார் ஒருலட்சம் லிட்டருக்குமேலான ஆவின்பால் விநியோகம் முடங்கியதாகவும், பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் ஆவின் பால் விநியோகம்செய்ய முடியாமல் அல்லல்பட்டதாகவும் பால் முகவர்கள் தெரிவித்தனர்.

பால் விற்பனையாகாமல் தேக்கம்: இது குறித்து பால் முகவர்கள் கூறுகையில், இரண்டாவது நாளாக, ஆவின் பால் விநியோகம் மிகவும் தாமதமாகி உள்ளது.இதனால், ஆவின்பால் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனை குளிர்சாதன பெட்டியில்வைத்து பராமரிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. ஆவின் அதிகாரிகள் தொடர்ந்துமெத்தனமாகவே செயல்பட்டுவருகின்றனர் என்றனர்.

இது குறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது வெளிமாவட்டங்களில் இருந்து வரவேண்டிய கொள்முதல் பால் வரத்து குறைவால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சரிசெய்யப்படும். புதன்கிழமை முதல் ஆவின் பால் வழக்கம்போல விநியோகம் செய்யப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x