

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவுமுடிந்த பிறகு, பணம் கொண்டு செல்வது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் வியாபாரிகள்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ‘அதிக அளவிலான நகைகள், பொருட்கள் மற்றும்ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்’ என்பது உட்படபல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம்கொண்டு சென்றால், வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இறுதிகட்ட தேர்தல் நடைபெறும்ஜூன் 1-ம் தேதிவரை நாடு முழுவதும் இந்தவிதிகள்அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும்19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தபிறகு, இங்கு மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை அடையாறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எம்.எஸ்.சந்திரசேகரன், கே.வீரையா, பி.கோதண்டபாணி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியபோது, ‘‘தேர்தல் நடத்தை விதிமுறை கட்டுப்பாடு காரணமாக வியாபாரிகளால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை வெளியே கொண்டு செல்ல இயலவில்லை.
வியாபாரிகள் பாதிப்பு: இதனால், பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை. இதேபோல, பொதுமக்களும் பணம் எடுத்துவர முடியவில்லை. எனவே, கடை வாடகை, பணியாளர் ஊதியம்கூட தர முடியாத நிலையில் உள்ளோம்.
எனவே, தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதிக்கு பிறகு, விதிகளை தளர்த்த வேண்டும் என்று தலைமைதேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம்’’என்றனர்.