Published : 17 Apr 2024 06:15 AM
Last Updated : 17 Apr 2024 06:15 AM
திருவள்ளூர்: தமிழகத்தில் வரும் 19-ம் தேதிமக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் 2,256 வாக்குச் சாவடிகளில், 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடி தலைமை அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர்-1, 2, 3 ஆகிய பதவிகளில் பணிபுரிய 9,924 மாநில, மத்திய அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சுமார் 30% வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலர்-2 பதவியில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களின் காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சத்துணவு மையங்களின் சமையலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். வாக்காளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவேட்டில் எழுதி, வாக்காளரின் கையெழுத்தைப் பெற்று, வாக்காளர் சீட்டை அளிக்கும் பணியில் ஈடுபடும் பொறுப்பில் உள்ள இவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தால் பணி எப்படி நடக்கும்?
அதுமட்டுமல்லாமல், மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் இந்தி மொழியை மட்டுமே தெரிந்துள்ள வட மாநிலங்களைச் சேர்ந்தோர் சுமார் 10% வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலர்-2 பதவியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.
வாக்குப் பதிவு அலுவலர்-2 பதவியில் எழுதப்படிக்கத் தெரியாத ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் வாக்குப் பதிவின்போது குளறுபடிகள், தவறுகள், தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே, குளறுபடிகளைத் தவிர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு அலுவலர்-2 பதவியில் ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பட்டப் படிப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி முடித்த ஊழியர்களை நியமிக்கமாவட்ட தேர்தல் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுஊழியர்கள் கோரியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT