Published : 17 Apr 2024 06:05 AM
Last Updated : 17 Apr 2024 06:05 AM
சென்னை: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உடல் சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை பூர்வீகமாக கொண்டவர் புலவர் இந்திரகுமாரி. திரைப்படத்தில் பாடலாசிரியராகும் முயற்சியில் இருந்த அவர், பேச்சாற்றல் காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
பின்னர், 1991-ம் ஆண்டு நாட்றாம்பள்ளி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாக விளங்கியவர்.
தொடர்ந்து அவர் 2006-ல் திமுகவில் இணைந்தார். அவருக்கு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவருக்கு பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளார்.
முதல்வர் இரங்கல்: அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், `திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது.
நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர்.
தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவுக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சியினர் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.
இந்திரகுமரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு சமூகநீதி கருத்துக்களை மக்களிடையே பரவச் செய்த அவரது பணிகள் என்றென்றும் போற்றத்தக்கவை என கூறியுள்ளார்.
மறைந்த புலவர் இந்திரகுமாரியின் உடல் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. முதல்வர் ஸ்டாலினின் சகோதரி மு.க.செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இந்திரகுமாரியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT