

சென்னை: ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ், அரங்குகள் அமைத்து பலவகையான பொருள்களை விற்பனை செய்ய 483 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு படிப்படியாக அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள் தயாரித்த பொருள்களை பிரபலப்படுத்தவும், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் சில்க் புடவைகளின் அரங்கு கடந்த 2022-ம் ஆண்டுமார்ச் 25-ம் தேதி அமைக்கப்பட்டது. இதன்பிறகு, பல்வேறு ரயில் நிலையங்களில் படிப்படியாக அரங்குகள் விரிவுபடுத்தப்பட்டன.
தற்போது, இந்த எண்ணிக்கை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் 180 நிலையங்களில் அரங்குகள் அமைத்து பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த அரங்குகளில் காஞ்சிபுரம், ஆரணி பட்டுப்புடவைகள், கைத்தறி துணிகள், தோல் பொருள்கள், இயற்கை மற்றும் மூலிகை பொருள்கள் உள்பட 600 வகையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரங்குகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள 483 ரயில் நிலையங்களில் அரங்குகள் அமைத்து பொருட்கள் விற்க அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் படிப்படியாக அரங்கு அமைத்து பல்வேறு வகைபொருட்கள் விற்பனை செய்ய ஊக்கப்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்தநிதியாண்டில் (2023-24-ம் நிதியாண்டில்) 263 அரங்குகள் அமைத்து, 600 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம், ரூ.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ், அரங்குகள் அமைத்து பலவகையான பொருள்களை விற்பனை செய்ய 483 நிலையங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,000 செலுத்தி, 15 நாள்களுக்கு ரயில் நிலையங்களில் அரங்குகளை அமைத்து, செயல்பட அனுமதி வழங்கப்படும். 15 நாள்களுக்கு பின்பு, மீண்டும் புதுப்பித்து வணிகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட வருவாயை அவர்கள் ஈட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.