Published : 14 Apr 2018 09:58 AM
Last Updated : 14 Apr 2018 09:58 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோக்களில் கட்டணம் அதிகரிப்பு: குறைந்தபட்சமாக ரூ.60 வரை வசூல்; பயணிகள் கடும் பாதிப்பு

பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60 என வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயித்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கிமீக்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் கள் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக் குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் முத்தரப்பு கமிட்டியும் அமைக்கவில்லை.

பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60 என வசூலிக்கின்றனர். பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் காட்சி பொருளாக இருக்கிறது. போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளும் நடத்தி வந்த சோதனை பணிகளும் தற்போது மெத்தனமாக நடப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் எந்த தயக்கமும் இன்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், வேறுவழியின்றி நடுத்தர மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது:

ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தபோது பெட்ரோல், டீசல் விலை வேறு. தற்போதுள்ள விலை நிலவரம் வேறு. அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தால் ஆட்டோவை ஓட்ட முடியவில்லை. கட்டண நிர்ணயம் செய்த பிறகு பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், இறக்கம் இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே வருகிறது. உதிரி பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால், மீட்டர் போட்டு ஓட்டிக் கொண்டிருந்த 80 சதவீத தொழிலாளர்கள் வேறு வழியின்றி மீண்டும் பழைய நிலைக்கு பேரம் பேசி கட்டணமாக வசூலிக்கின்றனர். விரைவில் கட்டணத்தை மாற்றியமைக்க கோரி முத்தரப்பு கமிட்டி அமைத்தால் தான் மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாதிப்பின்றி ஆட்டோ தொழிலை நடத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆட்டோ கட்டணம் குறித்து மாவட்டம்தோறும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, சென்னையிலும் அந்தந்த ஆர்டிஓகளின் (வட்டார போக்குவரத்து அலுவலகம்) எல்லைக்குள் அதிக கட்டணம் குறித்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். விரைவில் சிறப்புக் குழுவினர் ஆய்வு நடத்துவார்கள்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x