

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடை, சென்ட்ரல் ரயில்வே பொது மேலாளர் அலுவலகம், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஜவுளி கடையின் பின்புறம் அந்த கடைக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. 4 தளங்களைக் கொண்ட இந்த கிடங்கின், 4-வது தளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் ராஜ்பவன் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் 13 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயணைப்புத் துறை இணை இயக்குநர் விஜயசேகர் நேரில் வந்து தீயணைப்பு பணிகளை பார்வையிட்டார். அதிகாலையில் தீப்பிடித்ததால் ரங்கநாதன் தெருவில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல எந்த பிரச்சினையும் ஏற் படவில்லை. உயிரிழப்பும் ஏற் படவில்லை. காலை 9 மணிக்கு பின்னர் தீ பிடித்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்.
ரயில்வே அலுவலகம்
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் 2-வது மாடியில் ரயில்வே ஆவணக் காப்பக அறை உள்ளது. இந்த அறையில் அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சில முக்கியமான ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
கிண்டி தொழிற்பேட்டை
கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தீப்பிடித்தது. தக வல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.