Published : 16 Apr 2024 07:01 PM
Last Updated : 16 Apr 2024 07:01 PM

“தேர்தல் களத்தில் எங்களுக்கு திமுகதான் எதிரி... மற்றவர்கள் எல்லாம் ஜுஜுபி” - செல்லூர் ராஜூ

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

மதுரை: ‘‘மதுரை அரசியல் விழிப்புணர்வு மிக்க பூமி. எங்களுக்கு தேர்தல் களத்தில் எதிரி திமுகதான். மற்றவர்கள் எல்லாம் ஜுஜுபி’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று ரேஸ்கோர்ஸ் அரங்கில் விளையாடிய வீரர்களிடம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரும், வேட்பாளர் சரவணனும் சிறிது நேரம் இறகுப் பந்து விளையாடினர். வீரர்கள் சுற்றி நின்று அவர்களை உற்சாகப்படுத்தினர்.

அதன்பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது: “ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்கு எம்ஜிஆர் பலமுறை வந்துள்ளார். எம்ஜிஆர் பெயரைத் தாங்கிய இந்த விளையாட்டு அரங்கு அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மேம்படுத்தப்பட்டது. இங்கு இருக்கிற ஒலி, ஒளி காட்சியை எம்ஜிஆர்தான் தொடங்கி வைத்தார். திமுக ஆட்சியில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால், ஜிம்னாஸ்டிக் அரங்கம் போன்ற பல அரங்குகள் அதிமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. நானும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான். அந்த அடிப்படையில் இந்த விளையாட்டு அரங்கை இன்னும் மேம்படுத்த ஆசைப்படுகிறேன்.

என்னுடைய முயற்சியில் மதுரையில் ஏராளமான பாலங்களை கட்டியுள்ளோம். வைகை ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டியுள்ளோம். மதுரையின் 50 ஆண்டு குடிநீர் பிரச்சினையை போக்க முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், சு.வெங்கடேசன் நன்றாக கதை எழுதுவார். இப்போது பிரச்சாரத்தில் நன்றாக கதை விடுகிறார். அந்த கதையெல்லாம் படிக்கதான் நன்றாக இருக்கும். மக்களிடம் எடுப்படாது. தேர்தல் முடிந்துவிட்டால் கதை எழுதக் கூடிய சரக்கும் அவரிடம் தீர்ந்துவிடும்.

ஆனால், மருத்துவர் சரவணனிடம் சரக்கு உள்ளது. இரண்டு ஆளும்கட்சிகளை (மத்திய, மாநில அரசுகள்) எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். மதுரை அரசியல் விழிப்புணர்வு மிக்க பூமி. எங்களுக்கு தேர்தல் களத்தில் எதிரி திமுகதான். மற்றவர்கள் எல்லாம் ஜுஜுபி. பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் நல்லவர்தான். ஆனால், அவர் பாவம். மதுரையை ஆன்மிக பூமி என்றும், பாஜகவினர் வாக்கு வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள். அந்த கத்திரிக்காய் எல்லாம் இங்கே எடுபடாது.

சும்மா, சமூக வலைத்தளங்களில் கொடி பிடிப்பவர்களை வைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் யாரையும் எடைப்போட்டுவிட முடியாது. ஓ.பன்னீர்செல்வம் எப்படியிருந்த மனிதர். ஒரு எம்பி பதவிக்காக, தன்னுடைய கவுரவத்தைவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அண்ணாதுரை, ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசினார் அண்ணாமலை. ஆனால் அவருடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து போட்டியிடுகிறார். அதிமுக தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x