‘எவ்வளவு காலம் ஆய்வு செய்வீர்கள்?’ - சட்டப்பேரவை நேரலை வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

‘எவ்வளவு காலம் ஆய்வு செய்வீர்கள்?’ - சட்டப்பேரவை நேரலை வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
Updated on
1 min read

சென்னை: ‘தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். முழுமையாக தகவல்கள் கிடைத்த பின் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி,விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in