“ஊழலை ஆதரிக்கும் கட்சிகளே மோடியை எதிர்க்கின்றன” - ஜே.பி.நட்டா விமர்சனம்

புதுச்சேரியில்  நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்ற ஜே.பி.நட்டா. உடன், முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம். 
| படம்: எம்.சாம்ராஜ் |
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்ற ஜே.பி.நட்டா. உடன், முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம். | படம்: எம்.சாம்ராஜ் |
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மாலை புதுச்சேரியில் ரோடு ஷோவில் பங்கேற்றார். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகில் தொடங்கி காந்தி வீதி வழியாக அஜந்தா சிக்னல் வரை 1.7 கி.மீ தூரம் இந்த ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.

அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து நின்றபடி வந்த ஜே.பி.நட்டா தாமரைச் சின்னம் பொறித்த அட்டையைக் காட்டி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஆதரவு திரட்டினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.

ரோடு ஷோவில் வழி நெடுகிலும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க, மயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன், வண்ணக்காகித பூக்களை தூவியும் ஜே.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சில இடங்களில் ஜே.பி.நட்டா தன்னருகே இருந்த ரோஜாப்பூ இதழ்களை பொதுமக்களிடையே தூவி வாழ்த்த, சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த ரோடுஷோ நிகழ்வின் இறுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் நாட்டை வளர்ச்சியடைய வைக்கவில்லை. மத ரீதியில் நாட்டை துண்டாடியே அரசியல் லாபமடைந்து வந்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திமோடி நாட்டின் மக்களிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, நாட்டை வளர்ச்சியடைய வைத்துள்ளார்.

இண்டியா கூட்டணி கட்சிகள் ஊழல் நிறைந்தவையாக உள்ளன. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி ஊழலுக்கு எதிரானவர். ஆகவே அவர் ஊழலை ஒழித்து வருகிறார். ஊழலை ஆதரிக்கும் கட்சிகளே பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in