

சென்னை: தமிழகத்தில் சிவிஜில் செயலி மூலம் தேர்தல் தொடர்பாக 4,169 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வாக்காளர்கள் பாகம் எண், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள வாக்காளர் உதவி செயலியை பயன்படுத்தலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சிவிஜில் செயலிமூலம் இதுவரை 4,169 புகார்கள்பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில்உள்ள 39 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்காக 1,59,100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 88,783 வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு (விவிபாட்) இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 20 சதவீதம் உபரி இயந்திரங்களும் அடக்கம். வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் அனைத்தும் வரும் ஏப். 18-ம் தேதி இரவுக்குள் பாதுகாப்பாக தமிழகத்தில் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சட்டப்பேரவை உறுப்பினர் மறைவால் காலியான விக்கிரவாண்டி தொகுதி குறித்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். இந்த தேர்தலை ஒட்டியே அங்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும். அந்த தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தாலும், அவற்றை தேர்தலுக்காக சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. தேர்தல் நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம்.
தாம்பரம் ரயில் நிலையத்தில், ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் அனுப்பியுள்ள அறிக்கை அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.
செயலி பயன்பாடு: பொதுமக்கள் வசதிக்காக, பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி அமைவிடம் உள்ளிட்டவை அடங்கிய பூத்சிலிப் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பூத்சிலிப்பை கொண்டு யாரும் வாக்களிக்க இயலாது. சரியான பாகம், வரிசையை அறிந்து கொள்ள மட்டுமே. வாக்காளர்கள் அடையாள அட்டை அல்லது ஆதார் உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டிதான் வாக்களிக்க முடியும். பூத் சிலிப் தவிர, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்காளர் உதவி மையத்திலும் பாகம் எண், வரிசை எண் விவரங்களை அறியலாம். இதுதவிர, வாக்காளர் உதவி கைபேசி செயலியான ‘voters helpline app’ வாயிலாக இ-எபிக் அல்லது, பாகம், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், வாக்குச்சாவடி மையத்தில், நாம் எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும், வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டறைகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது தேர்தல் துறையின் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.