

சென்னை: சென்னை வாக்கு சதவீதத்தை உயர்த்த 45 வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டதேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் வாகன பேரணி அசோக் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்குப்பதிவு நாள் நெருங்கிவிட்டதால், தீவிர வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகிறோம். சென்னையில் 10-ல் 4 பேர் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. இவர்களை வாக்களிக்க வைக்க 45 வகையான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மோட்டார் சைக்கிள் பேரணி: அசோக் நகரிலிருந்து 100 அடி சாலை வழியாக சிவன் பூங்கா வரை 10 கிமீ தொலைவுக்கு 250 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது.
சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றை கண்காணிக்க 299 பகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ் தலா 8 முதல் 10 வாக்குச்சாவடிகள் வரும்.
முன்னேற்பாடுகள்: இவர்கள் காவல்துறையுடன் இணைந்து,18-ம் தேதி அந்த வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்புவது, 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், அவற்றை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்வதுபோன்ற பணிகளை மேற்கொள்வார்கள். வாக்கு எண்ணும் மையங்களிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 33 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு (85 சதவீதம்) வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.32 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் (மத்திய சென்னை) கே.ஜெ.பிரவீன் குமார், மண்டல அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.