

சென்னை: ஆவின் பால் பாக்கெட்களில் எப்போதும்போல், தமிழ் புத்தாண்டு வாழ்த்து இடம்பெறவில்லை என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தபோது, ‘‘தமிழை கொண்டாடும் விதமாக, உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறோம். ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளை ஆவின் பால் பாக்கெட்களில் வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடக்கூடிய தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து,பால் பாக்கெட்களில் இடம் பெறவில்லை. அந்த வகையில், தமிழர்களுக்கு எதிரான கட்சி திமுக என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது'’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில், பால் பாக்கெட்களில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.
இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் அச்சிடப்படவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளது.