Published : 16 Apr 2024 06:45 AM
Last Updated : 16 Apr 2024 06:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வருமானவரித் துறை ஆய்வறிக்கை சமர்ப்பிக்காததால் அந்த தங்கத்தை திரும்ப ஒப்படைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் பகுதியில் அண்மையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் இரண்டு மினி லாரிகளில் இருந்து சுமார் 1,425 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துக்கு முறையான ஆவணங்களை வாகனத்தில் வந்த நபர்கள் வழங்காததால், அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்தனர்.
பின்னர் தங்கம் எவ்வளவு உள்ளது என அதிகாரிகள் ஆய்வு செய்த போது அதில் 1,422.410 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. பின்னர் இந்த தங்கம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கத்துக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் தங்கத்தின் எடை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் இந்த தங்கத்துக்கு உரிமை கோரி தனியார் நிறுவனம் ஒன்று வந்தது. அந்த தங்கத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தது.
ஆனாலும் அந்த தங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆவணங்களில் ஏதேனும் குளறுபடி உள்ளதா? இந்த தங்கத்தை மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பாக மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ரூ.10 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தால், நாங்கள் அதனை வருமானவரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதன்படி இந்த தங்கத்தை ஒப்படைத்துவிட்டோம். அந்த தங்கத்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்துள்ளோம். ஆவணங்களை ஆய்வு செய்த வருமானவரித் துறை இதுவரை மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. அனைத்தும் சரியாக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்த பிறகே இது உரியவரிடம் ஒப்படைக்கப்படும்” என்றனர்.
வருமானவரித் துறையின் ஆய்வின்போது ஏதேனும் குறைகள் உள்ளதா? அது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்று கேட்டதற்கு அதுபோன்ற எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர். இதனால் தங்கத்தை திரும்ப ஒப்படைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT