Published : 15 Apr 2018 09:04 AM
Last Updated : 15 Apr 2018 09:04 AM

சென்னை திருமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் சிக்கியது: உதவி ஆணையர், உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரிடம் விசாரணை

திருமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 8,500 சிக்கியுள்ளது. இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உதவி காவல் ஆணையர், உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இருப்பவர் டி.கே. கமீல் பாட்சா. இவரது கட்டுப்பாட்டில் ஜெ.ஜெ. நகர், திருமங்கலம், நொளம்பூர் காவல் நிலையங்கள் உள்ளன.

உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் சில வழக்குகளை சட்ட விரோதமாக முடித்து வைக்க பணம் கை மாறுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. காவல் உதவி ஆணையர் அலுவலகம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்தால் மட்டுமே குற்றவாளிகளை கைது செய்ய வசதியாக இருக்கும் என்ற முடிவுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வந்தனர்.

அதன்படி, டிஎஸ்பி லவகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் திருமங்கலம் உதவி ஆணையர் கமீல் பாட்சாவை தீவிரமாக கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு அவர் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது இரவு 10.30 மணியளவில் தனிப்படை போலீஸார் அதிரடியாக திருமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

உதவி காவல் ஆணையர் கமீல் பாட்சாவை சுற்றி வளைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அவரை கொண்டு வந்தனர். பின்னர், அவரது அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, அவரது மேஜையில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

கமீல் பாட்சாவை பார்க்க வந்த கட்டுமான உரிமையாளர் கொடுங்கையூரைச் சேர்ந்த செல்வம் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுற்றி வளைத்தனர். அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரிடமிருந்தும் ரூ.2 லட்சத்து 58,500 சிக்கியது. 2 பேரிடமும் சேர்த்து ரூ.5 லட்சத்து 8,500 பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பணம் குறித்து உதவி ஆணையர் கமீல் பாட்சாவிடம் இரவு முதல் விடிய விடிய தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அதற்கு அவரால் சரியான பதிலை கூற முடியவில்லை எனத் தெரிகிறது. இதேபோன்று கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பணம் கைமாறியது தொடர் பாக ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜனும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கி உள்ளார். அவரிடமும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, "நிலம் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைக்க உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் லஞ்சப் பணம் கைமாறுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே அதிரடி நடவடிக்கையில் இறங்கினோம். இதில், ரூ.2 லட்சத்து 58,500 சிக்கியுள்ளது. முதல் கட்டமாக 3 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், தொடர்புடைய மீதம் உள்ளவர்களையும் விரைவில் பிடிப்போம். கமீல் பாட்சா வேறு ஏதேனும் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளாரா எனவும் விசாரிக்கிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x