

தூத்துக்குடி/ நாகர்கோவில்: தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. கேரளாபடகுகள் தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுக்க கப்பல் மற்றும் படகு மூலம்ரோந்து மேற்கொள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம்தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதிவரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 258, தருவைகுளத்தில் 245, வேம்பாரில் 36 என மொத்தம் 539 விசைப்படகுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியதால் அடுத்த இரு மாதங்களுக்கு மீன்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா படகுகள்: கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும் போது, மேற்கு கடற்கரை பகுதியான சேர்ந்த கேரளாவை சேர்ந்த மீன்பிடி படகுகள் தூத்துக்குடி உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு அத்துமீறி வந்துமீன்பிடித்துச் செல்வதாக தூத்துக்குடி மீனவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பாக மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து மீன்பிடி தடைக்காலத்தில் கேரள படகுகள் அத்துமீறி தூத்துக்குடி கடல் பகுதியில் நுழைந்து மீன்பிடிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் கடலோர காவல் படையினருடன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடல்சார் அமலாக்க பிரிவு போலீஸார் இணைந்து கப்பல் மூலம் கூட்டுரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியகடலோர காவல் படைக்கு தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்களிடம் இருந்து2 விசைப்படகுகளை வாடகைக்கு எடுத்து அதில் மீன்வளத்துறை அதிகாரிகள், கடல்சார் அமலாக்கப் பிரிவு போலீஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் ரோந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க தடை காலம் நேற்றுஅமலுக்கு வந்துள்ள நிலையில்,கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும்300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியை மீனவர்கள் தொடங்கினர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
சின்னமுட்டத்தில் மீன்பிடி சார்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும். அதேநேரம் விசைப்படகுகள் சீரமைப்பு மற்றும்அதை சார்ந்த வர்த்தகம் பரபரப்பாக நடைபெறும். இதனிடையே, வள்ளம், கட்டுமரங்கள், பைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகளில் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.