வளர்ச்சிக்கு ‘பிரேக்’, நிதானமின்றி ‘ஆக்சிலேட்டர்’... - மோடி மீது பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்

கம்பத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
கம்பத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
Updated on
1 min read

கம்பம்: பாஜக ஆட்சியில் நீடித்தால் தமிழக உரிமை பறிபோகும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனை ஆதரித்து அவர் கம்பத்தில் பிரச்சாரம் செய்தார். வடக்குப்பட்டி, வ.உ.சி. திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: நான் நிதியமைச்சராக இருந்த போது ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக இருந்தேன். அப்போது, அந்தச் சட்டத்தை தவறு என்றேன். நான் அப்போது சொன்னதை பல மாநிலங்களும் இப்போது உண்மை என்று புரிந்து கொண்டன. பாஜக உடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல் விலையும், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. இப்படி இருந்தால் இந்தியப் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி அடையும்? தேனி வாக்காளர்கள் 2019 மக்களவைத் தேர்தலில் தவறு செய்தது போல் இந்த முறையும் செய்யக் கூடாது, திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். காரை ஓட்டத் தெரியாதவர் போல மோடியின் ஆட்சி உள்ளது. நாட்டின் வளர்ச்சியின் போது `பிரேக்' போட்டு தடுத்து விடுகிறார்.

நிதானமாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் `ஆக்சிலேட்டரை' அழுத்தி விடுகிறார். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, கரோனா ஊரடங்கு போன்ற அடுத்தடுத்த தாக்குதல்களால் இந்தியப் பொருளாதாரமும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டு விட்டது. பாஜக ஆட்சியில் நீடித்தால் தமிழக உரிமை பறிபோகும் என்றார். கம்பம் எம்எல்ஏ என்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in