கொசுவை ஒழிக்க முடியாதவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? - சீமான் கேள்வி

கொசுவை ஒழிக்க முடியாதவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? - சீமான் கேள்வி
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சியின் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து, கும்பகோணம் உச்சிப் பிள்ளையார்கோயில் அருகில் நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது:

மீனவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என அனைவரும் வீதிக்கு வந்து போராடிவிட்டனர். தமிழகத்தில் அனைவரும் வீதிக்கு வந்து போராடிய பிறகும் நல்லாட்சி நடப்பதாக கூறுவதை நம்ப முடியுமா?. அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாத பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறார்?.

இந்திராகாந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததால், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதுவரை தமிழக மீனவர்கள் 350 பேர் கடலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு நீங்கள் உயிர் அல்ல. ஓட்டு அவ்வளவுதான். நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்கிரஸ், பாஜக கட்சிகள்தான் காரணம்.

நாட்டின் முறையற்ற நிர்வாகம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு இக்கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்று தமிழகத்தில் உள்ளவர்கள் இதை தட்டிக்கேட்கவில்லை. ஏனெனில், பதவிவெறி பிடித்து அலைகின்றனர். கொசுவை ஒழிக்க முடியாத இவர்கள், எப்படி ஊழல், லஞ்சத்தை ஒழிப்பார்கள்?.

நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை திராவிடக் கட்சிகள் பெற்றுத் தரவில்லை. காவிரி நீர் தராத காங்கிரஸுக்கு தொகுதி இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் கூற முடியவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in