பொன்னி அரிசி, சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு: பாரிவேந்தர் வாக்குறுதி

பொன்னி அரிசி, சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு: பாரிவேந்தர் வாக்குறுதி
Updated on
1 min read

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூரில் நேற்று தனது தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர், தேர்தல் அறிக்கை குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் இடையே புதிய ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும்.

தொகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் தரம் உயர்த்தப்படும். 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி மையங்கள், போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே முசிறி, தொட்டியம் பகுதியில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளித்தலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

ரஞ்சன்குடிகோட்டை, வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், சாத்தனூர் கல்மர பூங்கா, பச்சமலை, புளியஞ்சோலை ஆகிய சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி மற்றும் பெரம்பலூர் சின்னவெங்காயத்துக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி- மண்ணச்சநல்லூர்- துறையூர் - சேலம் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். நெ.1 டோல்கேட்- முசிறி சாலை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும். எனது சொந்த நிதியில் கூகூர் கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையருக்கும், துறையூரில் வீரன் சுந்தரலிங்கனாருக்கும் வெண்கல சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in