Last Updated : 04 Apr, 2018 09:04 AM

 

Published : 04 Apr 2018 09:04 AM
Last Updated : 04 Apr 2018 09:04 AM

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம்: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து 41 வழக்குகள் அடங்கிய கேஸ் டைரி எனப்படும் சிடி மாயமாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது என்று பொதுநல வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறினார்.

தமிழகத்தில் கோயில்களில் இருந்து அரிய, கலை நுணுக் கம் மிக்க சிலைகள் மாயமாகி வருகின்றன. கோயில்களில் இருந்து திருடப்படும் சிலைகள், ஆஸ்திரேலியா, அமெரிக் கா, ஜெர்மனி உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர் பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‘தமிழகத்தில் காணாமல்போன சிலைகள் குறித்த வழக்குகள் அனைத்தும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த வழக்குகளை விசாரித்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். இந்த வழக்குகள் அனைத்தும் கும்பகோ ணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்’ என கடந்த 2017-ல் உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகத்தின் பல் வேறு காவல் நிலையங்களில் பதிவான சுமார் 550 வழக்குகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரு கின்றன.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் யானை ராஜேந்திரன் கூறியது:

பழநி முருகன் கோயிலில் சிலை வடிவமைத்ததில் முறை கேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு நடவடிக்கை, நான் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே எடுக்கப் பட்டதாகும். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணம் நீதிமன்றத்தையோ, வழக்கு தொடர்ந்த எனக்கோ தெரியப்படுத்தாமல், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றியிருப்பது குற்றவாளிகளை தப்பிக்கவிடும் செயலாகும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் எத்தனையோ வழக்குகள் நடைபெறும் போது, ஏன் பழநி முருகன் கோயில் வழக்கை மட்டும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளேன். தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் எத்தனை வழக்குகள் உள்ளன என, 1980 முதல் உள்ள சில வழக்குகள் குறித்து குறிப்பிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதாக்கல் செய்தேன். அதற்கு கடந்த மாதம் 23-ம் தேதி பதில் வந்துள்ளது. அதில், 41 வழக்குகளின் கேஸ் டைரி எனப்படும் சிடி மாயமாகியுள்ளதாகவும், 1990- ல் ஒன்றரை அடி உயரமுள்ள மரகதலிங்கம் சிலை மாயமானது குறித்து கேட்கப்பட்டதற்கு, அவ்வழக்கு குறித்த ஃபைல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்கும் முன்பாக நடந்த வழக்குகள் அனைத்தும் அந்த துறையினரால் எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தை நாட உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x