தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது? - அண்ணாமலை கேள்வி

தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது? - அண்ணாமலை கேள்வி
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துக்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், மூன்று ஆண்டு காலமாக, திமுக ஆட்சி வெற்று விளம்பரத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை, தற்போது மக்களுக்குத் தெரிய வந்ததும், பதட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

அமைச்சரான முதல்வரின் மகன் உதயநிதி, மத்திய அரசு ரூ.1.7 லட்சம் கோடிதான் தமிழகத்துக்குக் கொடுத்திருக்கிறது, 29 பைசா தான் கொடுக்கிறது என்று ஊர் ஊராகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கையில், முதல்வர் ஸ்டாலின், ரூ.5.5 லட்சம் கோடி கொடுத்துள்ளது என்று கூறுகிறார். தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடப்பட்ட நிதி மற்றும் மானியங்களை முதல்வர் எந்தக் கணக்கில் வைப்பார்?

திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால், இவை மத்திய அரசு வழங்கிய நிதி இல்லை என்று ஆகிவிடுமா, அதுமட்டுமின்றி, மகனும் மருமகனும் ஒரே ஆண்டில் கொள்ளையடித்த ரூ.30,000 கோடி எந்தக் கணக்கில் வரும், விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

தமிழக அரசு பெறும் வரிப்பணத்தை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், டாஸ்மாக் வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக ஜிஎஸ்டியில் சுமார் 70 சதவீதம் நிதி என நேரடியாக தமிழக அரசுக்கு வருமானம் வருகிறது.

இத்தனை இருக்கையில் மாநிலம் முழுவதும், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சிறு குறு தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டும் பணத்தில் கொழிக்கிறார்கள். தமிழக அரசுக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?

கடந்த 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது, மதுரை எய்ம்ஸ் 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என பலமுறை அறிவித்த பிறகும், எய்ம்ஸ் பற்றி உளறிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது, அறிவித்தபடி எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வருவது உறுதி. அது மோடியின் கேரண்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in