Published : 15 Apr 2024 06:05 AM
Last Updated : 15 Apr 2024 06:05 AM
சென்னை: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின்பு அவற்றை ரகசிய அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்களை சரிபார்க்கும் அலுவலர்களுக்கான பணிகளின் விவரங்களை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: மதிப்பெண்களை விடைத்தாள் பக்கங்கள் மற்றும் வினாக்கள் வாரியாக சரிபார்க்க வேண்டும். தொடர்ந்து கட்டு எண், உறை எண், வரிசை எண் என்றவாறு அடுக்கி சுருக்க விவரத்தாளை மேல் வைத்து இடது மூலையில் தைத்து அதில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் கையெழுத்திட வேண்டும். அந்த விடைத்தாள் கட்டினை அன்றைய தினமே முகாம் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகள் ரகசிய அறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், உயிரியல் பாடத்தை பொறுத்தவரை மொத்த மதிப்பெண்களை மட்டுமே கணினியில் பதிவு செய்ய வேண்டும். இதுதவிர சுருக்க விவரத்தாள் குறித்து தேதி, பாடம் மற்றும் பயிற்று மொழி வாரியாக அதற்குரிய பதிவேட்டில் பதிவு செய்து முகாம் அலுவலரின் ஒப்பதல் பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT