Published : 15 Apr 2024 07:14 AM
Last Updated : 15 Apr 2024 07:14 AM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாதர் கோயிலில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களுடன் கூடிய படிகளுக்கு, தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று படிபூஜை நடைபெற்றது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் 60 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று 60 படிகளுக்கு, படிபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று 60 படிகளுக்கும் பூஜைகள் நடைபெற்றன. இதில், நிகழ் தமிழ்ப் புத்தாண்டான குரோதி ஆண்டுக்கு உரிய படிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பன்னிரு திருமுறைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நிகழாண்டில் மழைவளம் வேண்டியும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெருகவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம், வைரவேல் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT