

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த களஞ்சேரியில் உள்ள ஸ்ரீவேத வித்யா குருகுலத்தை சீதாராமன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்டோர் வேத பாடங்களைப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம். பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சீதாராமன் பேசி வெளியிட்ட ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கிடையில், களஞ்சேரியில் நேற்று காலை சீதாராமன் நடைபயிற்சி சென்றபோது, அவரை 2 பேர் தகாத வார்த்தையில் திட்டி, தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சீதாராமன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஆடியோ ஒன்று வெளியிட்டிருந்தேன். அதற்கு பிரதிபலனைக் கொடுத்து விட்டார்கள். நான் நடைபயிற்சி சென்றபோது, என்னை அடித்து, காட்டுக்குள் இழுத்துச் சென்று, தகாத வார்த்தைகளால் திட்டி, `ஒரு வாரம் வாயைப் பொத்திக்கொண்டு இரு' என மிரட்டினார்கள்.
இது அராஜகம், திமிர். இதுபோல பயமுறுத்தினால் எல்லோரும் அடங்கிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ராட்சசர் தான் இப்படி இருப்பார்கள். நாம் பயப்படக் கூடாது. இந்த முறை இல்லை, அடுத்த முறையும் அவர்கள் தேர்தலில் ஜெயித்து விடக்கூடாது.
இம்முறை நிச்சயமாக திமுகவை தோற்கடிக்க வேண்டும். நேர்மையான ஆட்சி வர வேண்டும். அப்போதுதான் சாதுக்களும், பொதுமக்களும் அமைதியாக வாழமுடியும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீதாராமனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, சீதாராமன் தரப்பில் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
அப்பகுதியில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலரிடம் கேட்டபோது, சீதாராமன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும், ஆளுங்கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, ஆளுங்கட்சியின் நற்பெயரைக் கெடுக்க, அவர் வீடியோ பதிவிட்டிருக்கலாம் என்றனர். இதற்கிடையே, மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் நேற்று மாலை சீதாராமனை சந்தித்து, ஆறுதல் கூறினார்.