Published : 15 Apr 2024 04:02 AM
Last Updated : 15 Apr 2024 04:02 AM
உதகை: பழங்குடியினர் பட்டியலில் படுகரின மக்களை சேர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
உதகையை அடுத்த கேத்தியில் நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். கேத்தியில் 14 ஊர் தலைவர் சங்கர் தலைமையில், கிராம மக்கள் எல்.முருகனுக்கு வரவேற்பளித்தனர். அங்குள்ள படுகரின மக்களின் பாரம் பரிய கோயில்களுக்கு சென்று வழிபட்டார்.
பின்னர், அவர் பேசும்போது, ‘‘இன்று அம்பேத்கரின் பிறந்தநாள். அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தில், மக்கள் அவரவர் மதம் மற்றும் தெய்வங்களை வழிபடுவது அடிப்படை உரிமை என கூறியுள்ளார். ஆனால், கடவுள் இல்லை, கல்லை வணங்குகின்றனர் என மக்களை ஆ.ராசா கொச்சைப்படுத்துகிறார். நீலகிரி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தேயிலை நிறைந்த இடத்தில் தேனீர் விற்பவரின் மகனாக வந்திருப்பது மகிழ்ச்சி என்றார்.
பிரதமர் முன்னிலையில் தேயிலைக்கு விலை நிர்ணயம் மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தேன். பழங்குடியினர் பட்டியலில் படுகரின மக்களை சேர்க்க உரிய ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு கோரியது. 9 மாதங்களாகியும் திமுக அரசு அதற்கான ஆவணங்களை மத்திய அரசுக்கு இதுவரை அனுப்பவில்லை. அதற்கான கோப்புகள் குப்பையில் போடப்பட்டுள்ளன. சுற்றுலா துறை அமைச்சர், ராசா உட்பட திமுகவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாஜக எம்பியாக மாஸ்டர் மாதன் இருந்த போது தான், அனைத்து ஊர்களிலும் சமுதாய கூடம், பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டன. அதற்கு முன்னரும், பின்னரும் ராசா உட்பட எந்த எம்பியும் நீலகிரிக்கு எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடி ஏழை மக்களின், இளைஞர்களின், விவசாயிகளின், தாய்மார்களின், நடுத்தர மக்களின் வளர்ச்சி நோக்கி பேசியுள்ளார். இதனால், நீலகிரி வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளில் குடும்பத்தினருடன் சென்று வாக்களிக்க வேண்டும். தாமதமாக சென்றால், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டு விடுவார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT