100% வாக்களிப்புக்காக குடியிருப்போர் நல சங்கத்தினர், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

100% வாக்களிப்புக்காக குடியிருப்போர் நல சங்கத்தினர், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 100 சதவீதம் வாக்களிக்கும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், ஆன்லைனில் 10 கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியுடன் காபி அருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் குறித்த விநாடி-வினா, குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு போட்டி நடத்தப்பட்டுள்ளன.

இதில் வெற்றி பெற்ற நலச் சங்கத்தினரை கொண்டு, ‘தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் காபி அருந்துவோம்’ நிகழ்ச்சி, சமூக வலைதள ஆர்வலர்களுக்கான ‘வாக்களியுங்கள், செல்ஃபி வெளியிடுங்கள்’ என்ற விழிப்புணர்வு போட்டி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்காக சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் க்யூஆர் குறியீடு (QR Code) கொண்ட போஸ்டர் வைக்கப்படும். அதில் 10 கேள்விகள் இருக்கும். சென்னைவாசிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.10 கேள்விகளுக்கான பதில்களையும் ஆன்லைனில் சமர்ப்பித்த உடன், பங்கேற்பாளர்களுக்கு இணையவழியில் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றிபெறுபவர்கள் பின்னர் கவுரவிக்கப்படுவார்கள்.

இப்போட்டியில் சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதியில் இருந்தும் தலா 2 பேர் வீதம், மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருடன் காபி அருந்தும் வாய்ப்பை பெறுவார்கள். தங்கள் பகுதியில் 100 சதவீதம் வாக்கு செலுத்திய குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in