தில்லை கங்கா நகர் அருகே இடிந்த ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணி தொடக்கம்

தில்லை கங்கா நகர் அருகே இடிந்த ரயில்வே மேம்பாலம் அகற்றும் பணி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகர் பகுதியில் பாரம் தாங்காமல் சரிந்து உடைந்த ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ. தொலைவுக்கு மேம்பால ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமானப் பணிகள், 4.5 கி.மீ. தொலைவுக்கு முடிவடைந்துள்ளன. தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில் தூண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதனிடையே, 157 மற்றும் 156-வது தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு ஒரு பக்க இரும்பு சாரம் அகற்றப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பெரும் சப்தத்துடன் சரிந்து விழுந்து, 3 அடி ஆழத்துக்கு சாலையில் புதைந்தது. இந்த மேம்பாலத்தை தாங்குவதற்காக தூணில் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டிருந்தது. இருந்தும் பாலம் உடைந்துள்ளது.

பாலம் விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய, ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து, அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், உடைந்த பாலத்தை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. உடைந்த பாலத்தின் கீழ் பகுதியில் இரும்பு சட்டங்கள், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தபாலத்தை பிரம்மாண்ட இயந்திரங்கள் வாயிலாக உடைத்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் இந்தப் பணி முடிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in