

சென்னை: தபால் வாக்கு மற்றும் இடிசி பெறாதவர்கள் நாளை (ஏப்.16) மாலை 5 மணிக்குள் பெற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை, ஜாக்டோ ஜியோ சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், கு.தியாகராஜன் ஆகியோர் சந்தித்து தபால் வாக்கு செலுத்துவதில் உள்ள குளறுபடிகள் குறித்து விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: கடந்த தேர்தல்களைபோல் அல்லாமல் இந்த தேர்தலில் முதல் முறையாக வரும் ஏப்.16-ம் தேதி மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் (Facilitation Centre) மட்டுமே பெறவும், செலுத்தவும் முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இடிசிஎனப்படும் தேர்தல் பணி சான்றிதழையும் ஏப்.16-ம் தேதி மாலை 5 மணிக்குள் பயிற்சி நடைபெறும் மையங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, பயிற்சி வகுப்பு நடைபெறும் ஏப்.18-ம் தேதி இடிசி அல்லது தபால் வாக்குகளை பெற முடியாது.
தபால் வாக்கு செலுத்த ஏப்.16-ம் தேதி பிற்பகலில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார். இடிசி வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் பணி வந்தால் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பயிற்சி வகுப்பு நடைபெறும் ஏப்.18-ம் தேதி இடிசி அல்லது தபால் வாக்குகளை பெற முடியாது.