Published : 15 Apr 2024 06:10 AM
Last Updated : 15 Apr 2024 06:10 AM
சென்னை: மேற்கு வங்கத்தில் இருந்து புதியஇன்ஜின்கள் வருவது தாமதம் ஆவதால் அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்புத்தொழிற்சாலையில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் ஐசிஎஃப் கவனம் செலுத்தி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு,ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே 50-க்கு மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், அனைத்துத் தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில் சாதாரண வந்தே பாரத் ரயில்(அம்ரித் பாரத் ரயில்) தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 2 சாதாரண வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பரில் ரயில்வேவாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த ரயிலில் 8 முன்பதிவு இல்லாதபெட்டிகள், 3-ம் வகுப்பு ஏசி பிரிவில்12 பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள், லக்கேஜ் உள்பட மொத்தம் 22 பெட்டிகள் இடம் பெற்றன. வந்தே பாரத் ரயிலுக்கு இணையாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் 1,834 பேர் பயணிக்க முடியும்.
இந்த ரயில்கள் தர்பங்காவில் இருந்து அயோத்தி வழியாக ஆனந்த் விஹாருக்கும், மால்டாநகரத்திலிருந்து பெங்களூருவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிவைக்கப்பட்டன. இந்த ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து, அதிக அளவில்அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரயில்களுக்கான இன்ஜின்கள் மேற்கு வங்கமாநிலம் சித்தரஞ்சன் ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
புதிய இன்ஜின்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால், அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பில் சுணக்கம்ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அம்ரித் பாரத் ரயில் பெட்டிதயாரிப்பில் தாமதம் எதுவுமில்லை.
ஆனால், புதிய ரயில் இன்ஜின் வருவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. மற்ற ரயில்களுக்கு இருப்பதுபோல, ஒரே இன்ஜின் மட்டும்போதாது. பழைய இன்ஜின்களை இணைத்து இயக்கவும் முடியாது.
அம்ரித் பாரத் ரயிலில் ஒரே நேரத்தில் இரண்டு இன்ஜின்களை இணைக்க வேண்டும். தற்போது இதற்கான பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. புதிய இன்ஜின்கள் வந்தவுடன், அம்ரித் பாரத் ரயில்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும்''என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT