

கடலூர்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிதம்பரம் மக்களவை பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி நேற்று காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தன் பிரச்சாரத்தை தொடங்கினார். பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள பூக்கடையில் இறங்கி மல்லிகைப் பூக்களைகட்டி கொடுத்து, “நானும் நடுத்தர குடும்பம் தான்; எனக்கு உங்களின் சிரமங்கள் புரியும். நான் வெற்றி பெற்றால், தொகுதியின் தேவைகளை உணர்ந்து மக்களவையில் குரல் கொடுப்பேன். தொகுதிக்கு தேவையானதை பெற்றுத் தருவேன்” என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர் இப்பகுதி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “கோயில்கள் என்பது ஆபாசமான பொம்மைகள் வீட்டிருக்கும் இடம் எனக் கூறியவர் திருமாவளவன், தற்போது தேர்தல் நேரத்தில் கோயிலுக்குச் சென்று, திருநீர் பூசிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவாக பேசிவிட்டு, தற்போது திருநீறு பூசிக் கொள்வது நியாயமா? பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், சிதம்பரம் தொகுதியை முதன்மையான தொகுதியாக மாற்று வேன்” என்றார்.
காட்டுமன்னார்கோவில் நகர பகுதி முழுவதும் வாக்கு சேகரித்த கார்த்தியாயினி, தொடர்ந்து குமராட்சி மற்றும் திருநாரையூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பாஜக மாவட்டத் தலைவர் மருதை, பாமக மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் மற்றும் பாஜக, பாமக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.